வில்வதின் மருத்துவ குணங்கள் (Beal tree Medical Benefits)

வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர் ஆகியவை துவர்ப்பு, இனிப்பு, கைப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. இவை நோய் நீக்கி உடலைத் தேற்றும்; இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்; வியர்வையைப் பெருக்கும்; மலமிளக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; காமம் பெருக்கும்.2

வில்வம் பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்ட, ஆண்டுதோறும் இலையுதிர்க்கக் கூடிய, நடுத்தரமான உயரம் கொண்ட மரம். வில்வ இலை பொதுவாக 3 அல்லது 5 சிற்றிலைகளைக் கொண்டதாகும்.

வில்வம் பூக்கள், 2.5 செ.மீ. குறுக்களவில், சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில், இனிய மணத்துடன் காணப்படும். வில்வம் பழங்கள், பெரியவை, 20 செ.மீ. வரை குறுக்களவானவை, கோள வடிவமானவை, முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர் சாம்பல் நிறமாகவும் இருக்கும்.

வில்வம் பழத்தோல், கடினமானது, பழச்சதை ஆரஞ்சு, நிறமானது. மணமும், சுவையும் கொண்டது. வில்வம் இந்தியா முழுவதும், சமவெளிகள், மலையடி வாரங்களில் பரவலாக காணப்படுகின்றது. கோயில்கள், வழிபாட்டுக்குரிய காடுகளில் இவை நட்டுப் பராமரிக்கப்படுகின்றன.

பல சிவன் கோயில்களில் இவை ஸ்தல விருட்சமாக வளர்கின்றன. வில்வ இலை, சிவ வழிபாட்டின்போது உபயோகிக்கப்படும் மிக முக்கியமான அர்ச்சனைப் பொருளாகும். கூவிளம், கூவிளை, மாதுரம் ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் உண்டு. வில்வம் இலை, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.

சிறுவர்களுக்கான சீத பேதி குணமாக வில்வம் பிஞ்சை நெல்லிக்காய் அளவு அரைத்து, 1 டம்ளர் மோரில் கலந்து குடிக்கக் கொடுக்க வேண்டும்.

மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குணமாக வில்வ இலைகளை அரைத்து, பசையாக்கி, கொட்டைப் பாக்கு அளவு காலையில் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 10 நாட்கள் வரை சாப்பிட்டு வரலாம். இந்தக் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நலம்.

சீதபேதி குணமாக நன்கு கனிந்த வில்வம் பழத்தை நீர்விட்டுப் பிசைந்து, நீரை வடிகட்டி, பின்னர், சம அளவாகச் சர்க்கரை கலந்து, தேன் சேர்த்து பதமாகக் காய்ச்சி, 30 மி.லி. அளவு சாப்பிட வேண்டும்.

மஞ்சள் காமாலை குணமாக ஒரு தேக்கரண்டி வில்வம் இலைத்தூளுடன், கரிசாலைச் சாறு சேர்த்து, குழப்பி காலையில் மட்டும் சாப்பிட வேண்டும். 5 நாட்கள் வரை சாப்பிடலாம். இந்தக் காலத்தில் புளி, காரம் மற்றும் அசைவ உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

வில்வ இலைத்தூள், ½ தேக்கரண்டி அளவு, வெண்ணெயுடன் கலந்து உணவுக்குப் பின்னர் சாப்பிட்டுவர வயிற்றுப்புண், மலச்சிக்கல் குணமாகும்.

வில்வம் பழச்சதை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, பேதி ஆகியவற்றைக் குணமாக்கும். குடல்புண் மற்றும் குடல் புழுக்களால் பாதிப்படைந்த வயிற்றை, வில்வம் பழச்சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் சரி செய்கின்றன. பாதியளவு பழுத்த வில்வம் பழங்கள், பசியையும், ஜீரண சக்தியையும் அதிகமாக்குகின்றன.

வில்வம் இலை, பழம், வேர் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் உயர்நிலை மருத்துவ ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 Comment

Leave a Reply to Carli Cancel reply